tamilnadu

img

கடும் வீழ்ச்சியைச் சந்திக்கும் இந்திய பங்குச் சந்தைகள்

மும்பை:
தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகள், கடந்த வியாழக்கிழமையன்று கடும் வீழ்ச்சியை சந்தித்தது, முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ஜூலை மாத காலத்தில், பங்குச் சந்தைகள் இப்படி ஒரு பெரும் சரிவை சந்தித்தது, 17 ஆண்டுகளுக்குப் பிறகு இதுதான் முதல்முறை என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.தேசிய பங்குச் சந்தையான நிப்டி வியாழக்கிழமையன்று 11,000 புள்ளிகளைவிடக் குறைந்தது. ஜூன் 3-ஆம் தேதியன்று, அதற்கு முந்தைய 52வாரங்களில் இல்லாத அளவிற்கு 12,103.05 என்ற அளவுக்கு நிப்டி புள்ளிகள் அதிகரித் திருந்தன. அதன்பிறகு, வியாழக்கிழமையன்றுதான் 10,980 புள்ளிகளுக்கு இறங்கி, நிப்டி வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். 

அதேபோல, 2019 மார்ச் மாதத்திற்குப் பிறகு மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸூம் 37,000 புள்ளிகளுக்கும் குறைவாக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.  வியாழனன்று ஒரேநாளில் மட்டும் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. வெள்ளிக்கிழமையன்றும், வர்த்தக நேர தொடக்கத்தில், சுமார் 360 புள்ளிகள் இறக்கத்திலேயே பங்குகள் வர்த்தகமாகின. பின்னர், முந்தைய நாளைக் (37,018 புள்ளிகள்) காட்டிலும், சுமார் 100 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 37,118.22 புள்ளிகளுக்கு வர்த்தகமாகின. நிப்டியும் காலையில் 100 புள்ளிகள் இறக்கம் கண்டு, பின்னர், 17.35 புள்ளிகளாக ஏற்றம் கண்டது. முந்தைய நாள் வர்த்தக நேர முடிவில், 10,980 புள்ளிகளாக இருந்த வர்த்தக மதிப்பு, வெள்ளியன்று பிற்பகல் 10,997.35 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகின.
மத்திய பட்ஜெட்டில் முன்மொழியப்பட்ட வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் மீதான வரி, மந்தமான பொருளாதாரம் மற்றும் வீழ்ச்சியடைந்துள்ள நுகர்வு ஆகியவையே, பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

;